புதுடெல்லி: மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை சற்று நிம்மதி கிடைத்த நிலையில், நேற்று மீண்டும் கனமழை பெய்ததால், புறநகர் ரயில் சேவைகள் தாமதமடைந்தன. இதனால் அலுவலகம் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பக்கத்து மாவட்டமான பால்கரில் உள்ள வசய்-விரார் பகுதியிலும், தெற்கு குஜராத்தின் பல இடங்களிலும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால், குஜராத் நோக்கிச் செல்லும் தூரப் பயண ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.
இந்த வார தொடக்கத்தில் போர் காட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மும்பை-புனே இடையேயான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது, அங்குள்ள மழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசின் முழு ஆதரவு இருக்கும் என்று அவர் உறுதியளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கனமழை பெய்ததால் தோண்டப்பட்ட மண் குன்று சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அங்கு மேலும் சிலர் மாயமானதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து,
மத்திய அமைச்சர் அமித் ஷா, நேற்று கேரள முதல்வர் வி.டி.சதீசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். வயநாடு சுரங்க விபத்து குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா முதல்வரிடம் விசாரித்தார் என்றும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார் என்றும் அம்மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.