மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக ரூ.182 கோடி மதிப்பிலான ஜிகாதி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘எக்ஸ்' தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நமது முகமைகள் ஆபரேஷன் ரேஜ்பில் மூலம் வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.182 கோடி மதிப்புள்ள, ஜிகாதி போதைப் பொருள் என்று அழைக்கப்படும் கேப்டகனை பறிமுதல் செய்துள்ளன. இந்த போதைப்பொருள் டெல்லி மற்றும் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட இருந்த இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டு, சிரியாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது, போதைப் பொருளுக்கு எதிரான நமது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்தியாவுக்குள் நுழையும் அல்லது நமது நாட்டை ஒரு வழித்தடமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு கிராம் போதைப் பொருளையும் நாம் கைப்பற்றுவோம். துணிச்சல் மற்றும் விழிப்புடன் செயல்பட்ட என்சிபி வீரர்களுக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
பெயர்க் காரணம்: கேப்டகன் என்பது ஃபெனெத்திலின் என்ற செயற்கை ஊக்க மருந்தின் வணிகப் பெயராகும். இது 1960-களில் கவனக்குறைபாடு, தூக்கமின்மை சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் அடிமையாக்கும் பண்புகள் மற்றும் தவறாகப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் காரணமாக 1980-களில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டது.
சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்கள், தங்கள் படையினரின் சோர்வை நீக்கவும் விழிப்புணர்வு மற்றும் துணிச்சலை அதிகரிக்கவும் இதை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இது ஜிகாதி போதைப் பொருள் என்று அழைக்கப்படுகிறது.