அராரியா: பிஹார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் சசாஸ்திர சீமா பால் துணை ராணுவப் படை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
புதிய ஆட்சி அமைந்ததும், அங்குள்ள ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர். பிஹாரின் சீமாஞ்சல் பகுதியிலும் ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் பணி தொடங்கும். இதைச் சொல்லி தான் கடந்தாண்டு நடைபெற்ற பிஹார் தேர்தலில் வெற்றி பெற்றோம். இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், நாங்கள் தான் வெற்றி பெற்றோம்.
ஊடுருவலால் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் சிக்கல் நிலவுகிறது. சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் எல்லாம் ஊடுருவல்காரர்களுக்கு கிடைக்கிறது. மக்கள் தொகை எண்ணிக்கையில் மாற்றம் நிலவுகிறது. இதை சரிசெய்வதில் பிரதமர் மோடி அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.