புதுடெல்லி: லடாக் என்பது ஒரு புவியியல் பகுதி மட்டுமல்ல, இது புத்த கலாச்சாரம் மற்றும் கருணையின் உயிரோட்டமுள்ள ஆய்வுக்கூடம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
லேயில் நடைபெற்ற புத்த பூர்ணிமா கலாச்சார விழாவில் உரையாற்றிய அமித் ஷா, “இந்திய நாகரிகம் நீண்டகாலமாக அமைதியை ஊக்குவித்து வருகிறது. இப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக அறிவு சார்ந்த கலாச்சார மரபுகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தலாய் லாமா இங்கு வரும்போது எல்லாம், இந்த நிலம் வெறும் புவியியல் ரீதியானது மட்டுமல்ல, இது பவுத்த கலாச்சாரம் மற்றும் கருணையின் உயிரோட்டமுள்ள ஆய்வுக்கூடம் என கூறுவார். 75 ஆண்டுகளுக்குப் பிறகு புனித பவுத்த தாதுக்கள் மீண்டும் லடாக்கிற்குத் திரும்பியுள்ளதால், இந்த ஆண்டு புத்த பூர்ணிமா தனிச் சிறப்புப் பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் மலைப்பகுதிகளில் சாலை வசதி மற்றும் இணைப்பு வசதிகள் குறைவாக இருந்ததால், மிகக் குறைந்த மக்களே இந்த புனிதத் தாதுக்களைத் தரிசிக்க முடிந்தது. ஆனால் தற்போதுள்ள வசதிகளால் லடாக், கார்கில் மற்றும் பிற சமூக மக்கள் இதன் மூலம் ஆன்மீக மற்றும் தெய்வீக உத்வேகத்தைப் பெற முடியும்" என தெரிவித்தார்.