கொல்கத்தா: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்ற சர்ச்சைக்கு மத்தியில், மேற்கு வங்கத்தின் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் நோக்கிலான இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் பெயரை, ‘விக்சித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர் மாற்றி, பல்வேறு மாற்றங்களை செய்ய வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான கர்மஸ்ரீ-க்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்து காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்காக வெட்கப்படுகிறேன். அவர்களால் தேசத் தந்தைக்கு மரியாதை கொடுக்க முடியாவிட்டால், நாங்கள் கொடுப்போம்’’ என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.