

மஸ்கட்டில் நடைபெற்ற இந்தியா - ஓமன் தொழிற் கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி
மஸ்கட்: இந்தியா - ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA), இருதரப்பு உறவுகளுக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் சென்ற பிரதமர் மோடி மஸ்கட்டில் இந்திய - ஓமன் வர்த்தக உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “இன்று நாம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கிறோம். இதன் எதிரொலி வரும் பல பத்தாண்டுகளுக்குக் கேட்கும். ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA), 21-ம் நூற்றாண்டில் நமது கூட்டாண்மைக்கு புதிய நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் அளிக்கும்.
இது முழு உலகுக்கும் நன்மை பயக்கும். இருப்பினும், இது ஓமனுக்கு இன்னும் அதிக நன்மை பயக்கும். ஏனென்றால், இந்தியாவும் ஓமனும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதோடு, நாம் கடல்வழி அண்டை நாடுகளாகவும் இருக்கிறோம். நமது மக்களுக்கு இடையேயான தொடர்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. நமது வர்த்தக உறவுகளில் பல தலைமுறைகளாக நம்பிக்கை உள்ளது. ஒருவருக்கொருவர் சந்தைகளை நன்க புரிந்து கொள்கிறோம்.
இந்தியாவின் இயல்பு எப்போதும் முற்போக்கானதாகவும் சுய உந்துதல் கொண்டதாகவும் இருந்து வருகிறது. இந்தியா வளரும்போதெல்லாம், அது தனது நண்பர்களும் வளர உதவுகிறது. இந்தியா - ஓமன் வளர்ச்சிப் பயணத்தில் பங்காளிகளாக இணையுமாறு ஓமன் நிறுவனங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா தனது கொள்கைகளை மட்டும் மாற்றவில்லை; தனது பொருளாதார மரபணுவையே அது மாற்றி இருக்கிறது. இதன் காரணமாகவே, இந்தியாவின் பொருளாதாரம் அதிக வேகத்தில் வளர்ந்து வருகிறது” என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.