அமராவதி: ஆந்திர மாநில தலைநகரான அமராவதியில் தூளூரு பகுதியில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 15 அரசு வங்கிகள், எல்ஐசி, தபால் நிலையம் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஆந்திர தலைநகர் பணிகளை மீண்டும் தொடங்குவது ஒரு யாகம் போன்றதாகும். புதிய தலைநகரை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரே இடத்தில் அரசு வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருப்பது அரிது.
வருங்காலங்களில் ஒரு தலைநகரை உருவாக்க வேண்டுமெனில், அமராவதியை உதாரணமாக காட்டலாம். தலைநகரம் உருவாக தங்களின் விவசாய நிலத்தை அரசுக்கு வழங்கிய விவசாயிகளின் தியாகம் மிகவும் உன்னதமானது.
அதுபோன்ற விவசாயிகளுக்கு சேவை புரிவது இங்குள்ள வங்கிகளின் கடமை. விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை கொண்டு செல்ல சிறப்பு ரயில்கள் வர உள்ளன.
மகாராஷ்டிராவில் இருந்து வாழைக்காயும், தமிழகத்தில் இருந்து தேங்காயும் சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோன்று, காய்கறிகள், பழங்களுக்கு ஆந்திராவை ஒரு மையமாக உருவாக்கி, இங்கிருந்து இவை ரயில் போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் விநியோகம் செய்ய முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு அருமையான திட்டத்தை தீட்டியுள்ளார். இதற்கு வங்கிகள் முதலில் ஒத்துழைக்க வேண்டும்.
நினைத்தபடியே அமராவதி தலைநகரம் வளர்ச்சி பெற வேண்டுமென பிராத்திக்கிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.