யஷ்வந்த் வர்மா
புதுடெல்லி: வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தை தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் வீட்டில் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பின்னர், தலைமை நீதிபதி நியமித்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பதவி விலகுமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் கீழ் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குழு அமைத்தார். இந்தக் குழு அறிக்கையை தாக்கல் செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் அவர் பதவி விலகி உள்ளார்.
“மிகுந்த மனவேதனையுடன் இந்த கடிதம் மூலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து உடனடியாக விலகும் வகையில் எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். இப்பதவியில் பணியாற்றியது எனக்குப் பெருமையாகும்” என குடியரசுத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.