அகிலேஷ் யாதவ்

 
இந்தியா

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 181 தொகுதிகளைக் கேட்கிறது: அகிலேஷ் யாதவ் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 181 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், பிரபல ஆங்கில நாளிதழான ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நடத்திய 2026-ம் ஆண்டுக்கான தலைமைத்துவ மாநாட்டில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி உறவு மிகவும் நன்றாக உள்ளது. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 181 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி, பாஜகவைவிட சிறப்பாக செயல்பட்டது. மொத்தமுள்ள 80-ல் 43 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்றது. 43.52 சதவீத வாக்குகளைப் பெற்றது.

மறுபுறம், பாஜகவின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 2019-ல் 62 ஆக இருந்த நிலையில், 2024-ல் 33 ஆகக் குறைந்தது. இதனால், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை பாஜகவால் பெற முடியவில்லை. 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், சமாஜ்வாதி கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014-ல் மத்தியில் பாஜக அரசு அமைந்தபோது, அந்த வெற்றிக்கு உத்தர பிரதேசம் முக்கியப் பங்காற்றியது. 2019-ல் மீண்டும் ஆட்சி அமைத்தபோதும் உத்தர பிரதேசம் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. ஆனால், இன்று இங்கு பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது. இதனால், மத்தியில் அமைந்துள்ள அரசு கூட்டணி அரசாக உள்ளது. அது பாஜக தனித்துப் பெரும்பான்மையுடன் அமைத்த அரசு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT