மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்எல்ஏ அனுபமாவை சந்தித்த அகிலேஷ் யாதவ்
லக்னோ: தனது உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் தீக்காயமடைந்த பாஜக எம்எல்ஏ அனுபமா ஜெய்ஸ்வாலை மருத்துவமனையில் சந்தித்து, நலம் விசாரித்தார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ். அவரது இந்தச் செயல் இப்போது பேசு பொருளாகி உள்ளது.
கடந்த சனிக்கிழமை உத்தரப் பிரதேச மாநில பஹ்ரைச்சில் மத்திய அரசின் மகளிர் இட ஒதுக்கீடு நடவடிக்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர்களான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் உருவ பொம்மையை பாஜக எம்எல்ஏ அனுபமா ஜெய்ஸ்வால் எரிக்க முயன்றார். அதில் எதிர்பாராத விதமாக அனுபமா காயமடைந்தார். முதலில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக லக்னோவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது முகத்தில் சுமார் 75 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று காயமடைந்து சிகிச்சையில் உள்ள அனுபமாவை, அகிலேஷ் யாதவ் சந்தித்து, நலம் விசாரித்தார். அப்போது அனுபமாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
“சமூகத்தில் பிளவு எனும் தீப்பிழம்பை நாங்கள் விரும்பவில்லை. அதற்கு மாறாக உள்ள நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் தான் விரும்புகிறோம். நமது நேர்மறையான அரசியல் பாரம்பரியம் இதைத்தான் நமக்கு போதிக்கிறது.
அதனால்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அனுபமா ஜெயஸ்வாலை சந்தித்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ஆறுதல் சொன்னேன். அரசியலுக்கான உரிய இடம் என்பது உண்டு. இருப்பினும் மனித உறவுகளுக்கும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. நல்லிணக்கம் நிலவ வேண்டும்” என்று அகிலேஷ் யாதவ் இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், எம்எல்ஏ அனுபமாவை போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்துள்ளார். அவருக்கு முறையான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதை அனுபமாவின் கணவர் அசோக் ஜெய்ஸ்வால் உறுதி செய்துள்ளார். உ.பி பேரவை சபாநாயகர் சதீஷ் மஹானா, லக்னோ மேயர் சுஷ்மா, பாஜக மாநிலத் தலைவர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் காயமடைந்த அனுபமாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.