இந்தியா

ரூபாய் மதிப்பு - பாஜக போட்டி: அகிலேஷ் யாதவ் விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரால், சர்வதேச சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 95-ஐ தாண்டி வீழ்ச்சி கண்டது. பின்னர் வர்த்தக நேர முடிவில் 94.70 என நிலைபெற்றது.

இது தொடர்பாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: "கீழ் நோக்கிச் சரிவு காண்பதில் யாருக்கு முதலிடம் என்பதில் இந்திய ரூபாய்க்கும், பாஜகவின் பிம்பத்துக்கும் இடையே தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் மோசடிகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.

          

இதனால், அக்கட்சியின் பிம்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்து வருகிறது. பாஜகவினர் தொடர்பான பல்வேறு புகார்கள் வெளிச்சத்துக்கு வந்தாலும், யாரும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதில்லை. அந்தக் கட்சி தற்போது தார்மீக ரீதியில் திவால் நிலையின் உச்சத்தை எட்டிவிட்டது." இவ்வாறு அகிலேஷ் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய அரசின் தொடர் தவறுகள் மக்களின் துயரத்தை பெரிதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் போர்ச் சூழல் சாமானியர்களுக்கு மேலும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது.

உணவகங்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், மக்களை பாதிக்கும் வகையில் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு உதவும் வகையில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை மட்டும் பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது" என்றார்.

SCROLL FOR NEXT