மும்பை: ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் மீதான தாக்குதலில், அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல், மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள குருத்வாரா ஒன்றில் தரிசனம் செய்தார். அப்போது, ஒருவர் அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இதில், சுக்பிர் சிங் பாதலின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபர் சீக்கியர் எனக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து நான்டெட் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து தகவல் கிடைத்ததை அடுத்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சுக்பிர் சிங் பாதலிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாக அவர் ஃபட்னாவிஸிடம் கூறியதாகத் தெரிகிறது.
தாக்குதல் நடத்தியவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாகவும், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுக்பிர் சிங் பாதல் இதற்கு முன் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில் தாக்குதலுக்கு உள்ளானார். அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் சேவை செய்து கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஒருவர் முயன்றார். அவர் தாக்குவதற்கு முன்பாக மற்றவர்கள் அவரை பிடித்து காவல்துறையினரடம் ஒட்டடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.