

மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் தேர்வுக் குழுவை அமைப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. மூன்றாவது முறையாக அப்பதவியை வகிக்க தனக்கு விருப்பமில்லை என்று அவர் கடிதம் மூலம் நிர்வாகக் குழுவுக்கு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவரது ராஜினமா ஏற்கப்படுவதாக டாடா ட்ரஸ்ட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டாடா ட்ரஸ்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீண்டும் பதவியை ஏற்க வேண்டாம் என்ற என்.சந்திரசேகரனின் முடிவை சர் டோராப்ஜி டாடா ட்ரஸ்ட் மதிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் தலைமைப் பொறுப்புக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
டாடா குழுமத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள், வளர்ச்சி மற்றும் உருமாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்கு நாங்கள் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் விழுமியங்கள் மற்றும் நீண்டகால நலன்களுக்கு ஏற்ப சுமுகமான, சரியான, ஒழுங்கான தலைமை மாற்றத்ததை உறுதி செய்வதில் டாடா சன்ஸிற்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என். சந்திரசேகரன் அறிக்கை: முன்னதாக என்.சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில், “சர் டோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியன ஏகமனதாக என்னை பிப்ரவரி 20, 2027-க்குப் பின்னரும் டாடா சன்ஸ் தலைவராக இருக்கும்படி பரிந்துரைத்தன.
இதை டாடா சன்ஸ் நிறுவனத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவும் ஏற்றுக் கொண்டது. இந்தப் பரிந்துரை டாடா சன்ஸ் போர்டுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் உறுப்பினர்களில் ஒருவர் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருமனதாக ஆதரவு இல்லாத நிலையில், நான் ராஜினாமா முடிவை எடுத்தேன்.
டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றிவிட்டேன். பெரு மதிப்புக்குரிய இந்த நிறுவனத்துக்கு இத்தனை ஆண்டுகளாக எனது பங்களிப்பைச் செலுத்தியது மனநிறைவைத் தருகிறது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் குழுமத்தினை தலைமையேற்று நடத்தியது என்பது மிகுந்த கவுரவும், மிகப்பெரிய பொறுப்பு.
எனக்கு அடுத்ததாக இந்தப் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை விரைவில் முடிவு செய்யும்படி நிர்வாக வாரியத்திடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அதன்மூலம் பொறுப்பு கைமாறுதல் சுமுகமாக நடைபெறும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
பின்னணி என்ன?
டாடா ட்ரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா மற்றும் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், 2027-க்குப் பின்னர், சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவராக நீட்டிக்க ஒருமனதான ஆதரவு எட்டப்படவில்லை. அதற்கு நோயல் டாடாவின் எதிர்ப்பே காரணம். இதனாலேயே என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்திருக்கிறார்.
அவர் தனது அறிக்கையில், டாடா சன்ஸ் போர்டு உறுப்பினர்களில் ஒருவர், தான் தொடர்வதற்கான பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் ராஜினாமா முடிவை எடுத்தேன் என்று கூறியுள்ளார். நோயல் டாடாவின் பெயர் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாமல் இருந்தாலும், அது நோயல் டாடா தான் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
டாடா ட்ரஸ்ட்ஸ் தலைவரான நோயல் டாடா, தனது மகன் நெவில் டாடாவுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தில் கூடுதல் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று விரும்பியதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே அவர் 2027 பிப்ரவரிக்குப் பின்னர் என்.சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் நீட்டிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
யார் இந்த சந்திரசேகரன்?
என்.சந்திரசேகரன் 1987-ல் டாடா க்ரூப்பில் பணியில் இணைந்தார். டாடா சன்ஸ் நிறுவனமானது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், ஏர் இந்தியாவை நிர்வகிக்கிறது.
படிப்படியாக வளர்ந்த என்.சந்திரசேகரன் 2009-ல் டிசிஎஸ் சிஇஓ ஆனார். 2017-ல் டாடா சன்ஸ் தலைவரானார். இந்தப் பதவிக் காலத்தில் இதுவரை ஏர் இந்தியா விமான விபத்து, சர்வதேச சந்தை அழுத்தத்தால் டிசிஎஸ்-ல் ஐடி சேவை கட்டணங்களை குறைக்க வேண்டிய நிர்பந்தம், ஜாகுவார் லேண்ட் ரோவரில் சைபர் தாக்குதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.