மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி முடிவு செய்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் நகராட்சிகள், பஞ்சாயத்துகளுக்கு கடந்த 2, 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 21-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநகராட்சிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மும்பை, நாக்பூர், புனே, பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சிகள் ஏ பிரிவில் உள்ளன.
மும்பை மாநகராட்சியில் 227 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணியின் வார்டு பங்கீட்டில் குழப்பம் நீடிக்கிறது. ஆளும் கூட்டணியில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) கட்சிகள் உள்ளன. இதில் அஜித் பவார் அணி தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.
இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸின் (அஜித் பவார்) மூத்த தலைவர் சுனில் தாட்கரே கூறும்போது, “மும்பை மாநகராட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளோம். இதன்படி தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தேர்தலுக்குப் பிறகு மகாயுதி கூட்டணியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்’’ என்று தெரிவித்தார்.