இந்தியா

“சமாதானப் பத்திரங்களில் கையெழுத்திடுவதை இயல்பாக்க முடியாது” - நேஹா போரா

மோகன் கணபதி

புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபடுபவர்களை விடுவிக்கும் முன்பாக சமாதானப் பத்திரங்களில் கையெழுத்திட வைப்பதை இயல்பாக்க முடியாது என்று அகில இந்திய மாணவர் அமைப்பின் தலைவர் நேஹா போரா தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகளான அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கும் முன்பாக, அவர்களிடம் சமாதானப் பத்திரங்களில் கையெழுத்து பெறப்பட்டது.

இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நேஹா போராவும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், விசாரணைக் காலத்தில் அமைதியைக் காக்க ஒரு ஜாமீன்தாரருடன் ரூ.10,000-க்கான தனிநபர் பிணைப்பத்திரத்தை ஏன் வழங்கக் கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு நேஹா போராவுக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேஹா போரா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நேஹா போரா, சிறப்பு நிர்வாக நீதிபதி முன் சமாதானப் பத்திரத்தில் தான் கையெழுத்திடப் போவதில்லை என கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள சிபிஐ (எம்எல்) விடுதலை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நேஹா போரா, “தெருக்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வது ஒரு ஜனநாயக உரிமை. அரசாங்கத்துக்கு எதிராக கேள்விகளை எழுப்புவது எவ்வாறு அமைதிக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியும்? நாம் அரசாங்கத்திடம் எந்த கேள்வியையும் கேட்கவில்லை என்றால், நாம் யாருடைய அமைதியை காக்கிறோம்?

அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பதற்கும், தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கும் உள்ள உரிமை ஒரு ஜனநாயகத்துக்கு அடிப்படையானது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை அமைதிக்கு எதிரான அச்சுறுத்தல் என்று முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. அமைதியான போராட்டங்களையும் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பையும் பொது ஒழுங்கு மீறல்களாகக் கருதக் கூடாது. கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT