புதுடெல்லி: தனது வாழ்க்கை குறித்த ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ என்ற புத்தகத்தை வெளியிட உள்ள நிலையில், ராஜீவ் காந்தி உடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், காதல் குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 22-ம் தேதி இன்ஸ்டாகிராமில் இணைந்த சோனியா காந்தி, ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ புத்தகத்தின் முதல் பார்வையை வெளியிட்டார். ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறது. வரும் நவம்பர் 10-ம் தேதி புத்தகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இதோ, எ ஜர்னி ஆப் லவ் என்ற புத்தகத்தின் முதல் பார்வை. இது அன்பு, கடமை, இழப்பு மற்றும் தனக்கான இடத்தைக் கண்டறிதல் குறித்த கதை. இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாக உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் தொடர்பான நினைவுகள் குறித்த வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இரண்டு நிமிடங்கள் கொண்ட அந்த காணொளியில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் தான் கழித்த ஆரம்பகால நாட்களை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
“கேம்பிரிட்ஜில் இருந்த ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் எனது அன்பின் பயணம் தொடங்கியது. ராஜீவும் நானும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் நினைவுகள் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கினோம். அந்த உலகத்தை நவம்பர் 10-ம் தேதி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி உடனான தனது முதல் சந்திப்பு குறித்து நினைவுகூர்ந்துள்ள சோனியா காந்தி, “எனக்குப் பிடித்தமான உணவுகளை, குறிப்பாக இத்தாலிய உணவுகளை வழங்கும் இடத்தை தேடிக் கொண்டிருந்தபோது அந்த உணவகத்தைக் கண்டறிந்தேன். அது ஒரு கிரேக்க உணவகம் (Varsity Restaurant). அங்கு ஐரோப்பிய மாணவர்கள் மட்டுமின்றி, இந்திய மாணவர்களும் உணவருந்த வருவார்கள். அந்த உணவகத்தில்தான் நான் ராஜீவை முதன்முதலில் சந்தித்தேன்.
அவரை முதன்முதலில் சந்தித்தபோதே அவருடன் இருக்க வேண்டும் என்று என் மனம் விரும்பியது. அதே உணர்வு அவருக்கும் இருந்தது என்பதை பிறகு தெரிந்துகொண்டேன். ஒரு பொதுவான நண்பர் மூலம் நாங்கள் அறிமுகமாகிக் கொண்டோம். பிறகு நாங்கள் நண்பர்களானோம். நண்பர்களுடன் விருந்துகளுக்குச் செல்வது, இடங்களைச் சுற்றிப் பார்ப்பது என பலவற்றில் ஈடுபட்டோம். ஒருமுறை ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட வேலன்டைன்ஸ் டே விருந்துக்கும் சென்றோம்.
அவர் மிகவும் மென்மையான தோற்றம் கொண்டவராக இருந்தார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அவரது அந்த மென்மையான இயல்புதான் என்னை மிகவும் கவர்ந்தது. என் மனதைத் தொட்டது. அதனாலேயே, நான் அவரை முதன்முதலில் சந்தித்த அந்தத் தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.