குறியீட்டுப் படம்
புதுடெல்லி: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, டெல்லியில் இறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஒன்று, ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த போயிங் 787-9 ரக விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு அவசர அவசரமாக அங்கு தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
AI2030 என்ற அந்த விமானம், பாதுகாப்புச் சோதனைகளுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல் உதவி ஆணையர் ஷிவ் தயாள் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “விமானம் மும்பை விமானத் தகவல் மண்டலத்தில் இருந்தபோது, சட்டவிரோத தலையீட்டைக் குறிக்கும் 'Squawk Code 7500' என்ற குறியீட்டை விமானி பயன்படுத்தியதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்தே விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்புப் படையினர் விமானத்தைச் சோதித்து வருகின்றனர்.
விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கையை உடனடியாக அறிய முடியவில்லை. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.