இந்தியா

ஜார்க்கண்டில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழப்பு

டெக்ஸ்டர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஏழு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எஞ்சிய 6 பேரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

ராஞ்சி விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை மாலை டெல்லி நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தேடுதல் பணிகளுக்குப் பிறகு, விமானம் சத்ரா மாவட்டத்தின் சிமரியா காவல் எல்லைக்குட்பட்ட கர்மதந்த் கிராமத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ராஞ்சி விமான நிலைய இயக்குநர் இந்த விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

          

விமானத்தில் ஒரு நோயாளி, மருத்துவர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் என மொத்தம் ஏழு பேர் இருந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர் யார் என்ற விவரம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விபத்து நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்புப் பணிகளில் சவால்கள் நீடித்து வருகின்றன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT