ஸ்ரீநகர்: தீவிரவாதத்தின் பிடியில் சிக்கிய இளைஞர் ஒருவர், பின்னாளில் தாய்நாட்டின் பாதுகாப்பு அரணாக மாறி, தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த சம்பவம் எவரையும் நெகிழ்ச்சியடைய செய்யும். இந்த இளைஞரின் பெயர் நசீர் அகமது வானி. அவரது 8-ம் ஆண்டு நினைவு நாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது.
யார் இந்த நசீர் அகமது வானி?
1980-ம் ஆண்டு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலுள்ள செக்கி அஷ்முஜி கிராமத்தில் பிறந்த நசீர் அகமது வானி, 1990-களில் தீவிரவாத அமைப்பில் இணைந்தார்.
பின்னர், ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தார். பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் சரணடைந்த தீவிரவாதிகளைக் கொண்ட ‘இக்வான்’ அமைப்பில் இணைந்து செயல்பட்டார். அவரது துணிச்சலையும், காஷ்மீரின் நிலப்பரப்பு குறித்த அறிவையும் கண்ட ராணுவம், 2004-ம் ஆண்டில் அவரை 162-வது காலாட்படை பட்டாலியனில் இணைத்தது. பின்னர் 34 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவில் பணியாற்றி், 17-க்கும் மேற்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
சேனா பதக்கம்
2007-ம் ஆண்டு ‘ஆபரேஷன் ஆகம்’ நடவடிக்கையில் 4 தீவிரவாதிகளை வீழ்த்த உதவியதற்காகவும், 2017-ல் நடைபெற்ற மற்றொரு ராணுவ நடவடிக்கையில் ஒரு தீவிரவாதியைக் கொன்று இருவரை உயிருடன் பிடித்ததற்காகவும் இருமுறை அவருக்கு ‘சேனா பதக்கம்’ வழங்கப்பட்டது.
2018-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி ஷோபியான் மாவட்டத்தின் படகுண்ட் பகுதியில் பதுங்கியிருந்த 6 தீவிரவாதிகளை பிடிப்பதற்கான வேட்டையில் வானியும் பங்கேற்றார். இதில் லஷ்கர்-இ-தொய்பா மாவட்டத் தளபதி உட்பட 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று, சக வீரர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினார். எனினும் மற்ற தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் வானி வீரமரணம் அடைந்தார்.
அசோக சக்ரா
அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் மிக உயரிய வீரதீர விருதான ‘அசோக சக்ரா’ அவரது மனைவி மஹாஜபீன் அக்தரிடம் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரிலிருந்து இவ்விருதைப் பெற்ற முதல் ராணுவ வீரர் என்ற பெருமையை வானி பெற்றார்.