புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இணையத்தில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து, ‘மக்கி ஜனதா கட்சி’ (எம்ஜேபி) என்ற பெயரில் புதிய நையாண்டி இயக்கம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதன் பெயர், ஈ ஈமோஜி, செய்திகள் ஆகியவை வைரலான சிஜேபியை நினைவூட்டுகின்றன.
எம்ஜேபியின் இன்ஸ்டாகி ராம் கணக்கு (@makkhijanta party) தன்னை ‘இளைஞர்களின், இளைஞர்களால், இளைஞர்களுக்காக’ உருவான அரசியல் முன்னணி என அறிமுகப்படுத்துகிறது. தான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதும் அல்ல, எந்தக் கட்சியுடனும் இணைந்ததும் அல்ல என்றும் தெரிவிக்கிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, அக்டோபர் 10 அன்று டெல்லியில் போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு ஜந்தர் மந்தரில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் பல மெட்ரோ நிலையங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. பொதுமக்களின் பயணத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். அக்டோபர் 9 அன்று, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகள் அளவுக்கு மீறக் கூடாது என்று கூறியது. “ஈயைக் கொல்ல சுத்தியலைப் பயன்படுத்த வேண்டாம்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்தக் கருத்தே மக்கி ஜனதா கட்சியின் பெயருக்கும் நையாண்டிக்கும் அடிப்படையானது.
எம்ஜேபி தனது பதிவுகளில், “ஒரு நாள் கரப்பான் பூச்சி, மறுநாள் ஈ... ஜனநாயகத்தில் மக்களை இப்படியா அழைப்பது?” என்று கேள்வி எழுப்புகிறது. எம்ஜேபியின் இணையதளம் முதலாளித்துவம், தொழில் முனைவு, வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் வளர்ப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.