இந்தியா

“2014 முதல் இதுவரை 50,000 நவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பு” - பிரதமர் மோடி பெருமிதம்

மோகன் கணபதி

வடோதரா: கடந்த 2014 முதல் இதுவரை இந்தியா 50,000 நவீன ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள பிரதர் நரேந்திர மோடி, முந்தைய அரசால் 10 ஆண்டுகளில் 50,000 கழிப்பறைகளைக் கூட கட்ட முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

குஜராத்தின் வடோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.20,700 கோடிக்கும் அதிக மதிப்பீட்டில் 326 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சிறப்பு ரயில் சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், 329 கிலோ மீட்டர் வழித்தடங்களை உள்ளடக்கிய ரூ.9,700 கோடிக்கும் அதிக மதிப்பீட்டிலான மூன்று ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “எனது வருகையை ஒட்டி தூய்மை மூலம் வரவேற்பு இயக்கத்தை நீங்கள் செயல்படுத்திய விதத்துக்காக பாராட்டுக்கள். வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் இலக்கை அடைய விரிவான, வேகமான, திறமையான இணைப்பு வசதிகள் நமக்கு வேண்டும்.

இன்று, 2,800 கிலோ மீட்டருக்கும் அதிக நீளம் கொண்ட சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக ரயில் வழித்தடம் நிறைவடைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் பணி கலாச்சாரம் எவ்வாறு மாறியுள்ளது என்பதற்கு இந்த சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடமே சான்று.

இந்த சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தட யோசனை 2004ல் தொடங்கியது. 2006ல் இதற்கென சிறப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஆனால், 2014 வரை கோப்புகள் ஒவ்வொரு இடமாக சுற்றிக்கொண்டே இருந்தது. 2014க்குப் பிறகு உங்கள் ஆசியுடன் நான் டெல்லிக்குச் சென்றவுடன் இப்பணியை விரைவுபடுத்தத் தொடங்கினோம். 2,800 கிலோ மீட்டர் நிளமுள்ள சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

முன்பெல்லாம், பயணிகள் ரயில்களும் சரக்கு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் இயங்க வேண்டி இருந்ததால், பயணிகள் ரயில், சரக்கு ரயில் இரண்டுமே தாமதமடைந்தன. சரக்குப் போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடங்கள் இந்த நிலையை மாற்றியுள்ளன.

இந்த வழித்தடங்கள் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் உயிர்நாடியாக உள்ளன. இன்று கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு போக்குவரத்து வழித்தடங்களில் தினமும் 430க்கும் அதிக சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பு ஒரு சரக்கு ரயில் 100 கிலோ மீட்டரைக் கடக்க 6 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகின. இப்போது அது பாதிக்கும் குறைவான நேரத்திலேயே கடக்கின்றன.

முந்தைய அரசுகளின் காலத்தில் பட்ஜெட்டில் ஒன்று அல்லது இரண்டு ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்படும். அதையே ஒரு வருடம முழுவதும் பெரிதாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றோ, நாடு முழுவதும் ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இன்றைய நிகழ்ச்சியில்கூட பல புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் 2.9 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு அதிகம்.

கடந்த 10 ஆண்டுகளில் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2014-க்குப் பிறகு இந்தியா 50,000-க்கும் அதிகமான நவீன ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்துள்ளன. முந்தைய அரசுகளால் 50,000 கழிப்பறைகளைக் கூட கட்ட முடியவில்லை.

முந்தைய ஆட்சியாளர்கள் பொய்களையே மூலதனமாகக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்தார்கள். ஆனால், இந்தியாவின் இளைஞர்கள் உண்மையின் முழக்கத்துடன் முன்னேறுகிறார்கள். உண்மையின் முழக்கத்தோடு இணைந்து பயணிக்கிறார்கள்.

உண்மையின் முழக்கத்தின் மூலமாகவே முன்னேறிச் செல்கிறார்கள். இந்திய வரலாற்றில் இந்த காலகட்டம் முன்னெப்போதும் இல்லாத ஒன்று. இது இந்தியாவின் இளமை ஆற்றல் உச்சத்தில் இருக்கும் சகாப்தம். இந்திய வரலாற்றில் இந்த காலம் ஒருபோதும் மீண்டும் வராது. எனவே, 2047க்கும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்குக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT