பிரதமரை மோசமாக விமர்சித்த விவகாரம்: ராகுல் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய மும்பை ஐகோர்ட் மறுப்பு

பிரதமரை மோசமாக விமர்சித்த விவகாரம்: ராகுல் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய மும்பை ஐகோர்ட் மறுப்பு
Updated on
1 min read

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை ‘திருடர்களின் தலைவர்’ என விமர்சித்ததால் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை ‘திருடர்களின் தலைவர்’ என்றும் அவர் விமர்சித்திருந்தார். மேலும், தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றிலும் பிரதமர் மோடியை ‘திருடர்களின் தலைவர்’ என்று அவர் விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிராக பாஜகவை சேர்ந்த ஸ்ரீஷ்ரிமால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கிர்காம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 2019ல் ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது.

இந்த வழக்கை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்மனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணையை ஒத்திவைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு 2021-ல் உத்தரவிட்டது. இதனால், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் ராகுல் காந்திக்கு இல்லாமல் போனது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் மனு மீது மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆர்.போர்கர் இன்று தீர்ப்பளித்தார். அவர் தனது உத்தரவில், மாஜிஸ்திரேட்டின் உத்தரவில் எந்தவிதமான குறைபாடும் இல்லை என்று நீதிமன்றம் கருதுகிறது. அதில் தலையிட எந்த காரணமும் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக இப்புகார் மீதான விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மாஜிஸ்திரேட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமரை மோசமாக விமர்சித்த விவகாரம்: ராகுல் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய மும்பை ஐகோர்ட் மறுப்பு
இன்று முதல் 3 நாட்களுக்கு விருப்ப மனுக்களை பெறலாம்: இடைத்தேர்தலை ஒட்டி அதிமுக அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in