திருப்பதி லட்டு பிரசாதம்
புதுடெல்லி: திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கில் சுக்ருதி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களாவை, அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இதுகுறித்து, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாம் கர்னல் எண்ணெய், பாமோலின் ஆகியவற்றுடன் எம்ஜி-90, மோனோ கிளிசரைடுகள் மற்றும் அசிட்டிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனங்களை சேர்த்து சில நிறுவனங்கள் நெய் தயாரித்துள்ளன. பின்னர், இதை ‘அக்மார்க் சிறப்பு பசு நெய்’ எனக் கூறி திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி உள்ளனர். 2019 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் கலப்பட நெய் விநியோகங்களின் மதிப்பு ரூ.230 கோடியாகும். இதில் ரூ.96 கோடி மதிப்பிலான கலப்பட நெய்யை உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த சுக்ருதி ஃபுட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த வழக்கில் நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களா முக்கிய சதிகாரர்களில் ஒருவராக செயல்பட்டுள்ளார். இதையடுத்து, கைலாஷ் சந்த் மங்களா கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
மேலும், ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷாலிட்டீஸ், மல்கங்கா மில்க் & அக்ரோ புராடக்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மூலம் கலப்பட நெய்யை விநியோகிக்க மங்களா ஒருங்கிணைப்பு செய்துள்ளார்.
நெய், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஆகியவற்றின் கொள்முதல், விற்பனை தொடர்பாக போலியான பதிவுகளை மங்களா உருவாக்கி பராமரித்துள்ளார். கலப்படப் பொருட்கள் உண்மையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை மறைத்து, உண்மையான பசு நெய் தயாரித்து விநியோகித்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், போளே பாபா ஆர்கானிக் டெய்ரி மில்க் நிறுவனத்தின் உரிமையாளரும் இயக்குநருமான விபின் ஜெயினை அமலாக்கத்துறை ஏற்கெனவே கைது செய்தது குறிப்பிடத்தக்கது.