இடது: சோனல் | வலது: பிவி சிந்து
புதுடெல்லி: ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், துபாயில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை சோனல் சவுகான், நாடு திரும்ப பிரதமர் மோடியின் உதவியை நாடியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் பதிலடி தாக்குதலில் இறங்கியது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உட்பட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங் களை ரத்து செய்தன.
அதிக விமானங்கள் வந்து செல்லும் துபாய் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் கூட்டமாக காத்துக் கிடக்கின்றனர். ஜனத் இந்தி படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை சோனல் சவுகானும், துபாய் சென்று நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ”வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நான் பாதுகாப்பாக நாடு திரும்ப மத்திய அரசு உதவி செய்து வழிகாட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.
பி.வி.சிந்தும் சிக்கியுள்ளார்: ஒலிம்பிக் போட்டியில் இரு முறை பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும், தனது பயிற்சியாளருடன் துபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில், ”துபாய் விமான நிலையம் பதற்றத்துடன் காணப்படுகிறது. சில மணி நேரங்களுக்கு முன்பு துபாய் விமான நிலையத்தில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகே வெடிச் சத்தம் கேட்டது. எனது பயிற்சியாளர் அங்கிருந்து வேகமாக ஓடிவந்தார். இங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
நாங்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளோம். எங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள துபாய் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி. எங்களுக்கு உதவும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி” என கூறி உள்ளார்.