புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் யூனியன் (டியூஎஸ்யூ) அமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. நிர்வாகிகள் தேர்தலில் 3 முக்கிய பதவிகளுக்கு ஏபிவிபி அமைப்பினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
யூனியன் தலைவராக ஏபிவிபி அமைப்பின் யாஷ் தபாஸ் தேர்வு செய்யப்படுள்ளார். அவர் 24,576 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-வின் விஜய் சங்கர் 22,523 வாக்குகளைப் பெற்றார்.
என்எஸ்யுஐ வேட்பாளருக்கு எதிராக அதிருப்தி வேட்பாளராக களமிறங்கிய தீபான்ஷி ஷோகீன் துணைத் தலைவராக தேர்வாகியுள்ளார். அவர் 30,615 வாக்குகள் பெற்று வெற்றி பெறறார். துணைத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட்ட ஏபிவிபி அமைப்பின் இஷு மவுர்யா 16,910 வாக்குகள் பெற்றார். என்எஸ்ஐயு வேட்பாளர் வீர் சத்ரத் 4,313 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
டியூஎஸ்யூ செயலாளராக ஏபிவிபி-யின் ரியா சாவ்டி தேர்வானார். இணைச் செயலாளராக ஏபிவிபி-யின் லக்சய் ராஜ் சிங் தேர்வாகியுள்ளார். இதன் மூலம் டியூஎஸ்யூ-வில் உள்ள 4 மத்திய நிலைக்குழு பதவிகளில் 3 பதவிகளை ஏபிவிபி அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர்.