புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து மேற்கு வங்கத்தில் 7.66 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.04 கோடியாகக் குறைந்தது.
இதைத் தொடர்ந்து நீதித்துறை அதிகாரிகள் நடத்திய பரிசீலனையின் போது மேலும் 27.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து மொத்தமாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 90.83 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “விரைவில் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் உள்ள வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியலை அனைவரும் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு புதிதாக யாராவது விண்ணப்பித்திருந்தால், அவர்களின் பெயர்கள் சட்டவிதிகளின் படி சேர்க்கப்படும்” என்றார்.