போங்கைகாவ்: அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போலி இந்திய அடையாள அட்டைகளுடன் சுற்றித்திரிந்த 9 வங்கதேசத்தினர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போங்கைகான் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நியூ போங்கைகான் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது சந்தேகத்தின் பேரில் 9 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினோம்.
அப்போது, அவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. முதலில் 6 பேரும், அதைத் தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 4 வங்கதேச அடையாள அட்டைகள், 6 மொபைல் போன்கள், 1 வங்கதேச பாஸ்போர்ட், 3 போலி இந்திய ஆதார் அட்டைகள் மற்றும் 5 ரயில் பயணச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அண்டை மாநிலம் வழியாக அசாமுக்குள் ஊடுருவி, இங்கிருந்து வேலை தேடி வெளிமாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, செப்டம்பர் 16-ம் தேதி, குவாஹாட்டி மற்றும் ரங்கியா ஆகிய பகுதிகளில் அசாம் காவல் துறையினர் நடத்திய தனித்தனி சோதனைகளில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 27 வங்கதேச ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.