இந்தியா

டிஜிட்டல் கைது மோசடியில் இருந்து மகனை காத்த 81 வயது தந்தை - நடந்தது என்ன?

வேட்டையன்

புனே: தனது மகனும், மருமகளும் டிஜிட்டல் கைது மோசடியாளரிடம் சிக்கிய நிலையில், தக்க சமயத்தில் அவர்களை காத்துள்ளார் 81 வயதான தந்தை ஒருவர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றுள்ளது.

இப்போதெல்லாம் தினமும் டிஜிட்டல் கைது மோசடியாளர்களிடம் சிக்கி லட்சக்கணக்கான ரூபாயை சாமானிய மக்கள் இழப்பது குறித்த சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகிறது.

இந்தச் சூழலில் இணையவழி மோசடியாளர்கள் ரூ.12 லட்சம் கேட்டிருந்த நிலையில் தனது மகனையும், மருமகளையும் புனேவை சேர்ந்த முதியவர் ஒருவர் காத்துள்ளார். இது குறித்து போலீஸில் அந்த குடும்பம் புகார் அளிக்கவே அது பொதுவெளியில் கவனம் பெற்றுள்ளது.

அந்த முதியவரின் மகன், பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு தெரியாத எண்ணில் இருந்து கடந்த 19-ம் தேதி வாட்ஸ்அப் தளத்தில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை மும்பை காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

‘உங்களுக்கு வந்துள்ள பார்சல் ஒன்றில் 5 பாஸ்போர்ட் மற்றும் போதைப்பொருள் உள்ளது. உங்களிடம் மேல் அதிகாரி உயர்மட்ட விசாரணை மேற்கொள்வார்’ என அதிகாரி போல பேசிய மோசடியாளர் கூறியுள்ளார். அதோடு அந்த முதியவரின் மகன் மற்றும் மருமகளின் செல்போனில் ‘சிக்னல்’ மெசேஜிங் செயலியை இன்ஸ்டால் செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னர் வீடியோ அழைப்பில் போலீஸ் சீருடையில் தம்பதியரிடம் பேசிய ஒரு நபர், தன்னை விசாரணை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அந்த தம்பதியர் மீது சில குற்றச்சாட்டுகளை அவர் வைத்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என கூறியுள்ளார். அதோடு அவர்களின் ஆதார் கார்டு மற்றும் வங்கி விவரங்களையும் அவர் சேகரித்துள்ளார். ரூ.12 லட்சத்தை வழங்கினால் இந்த குற்ற வழக்கில் இருந்து தப்பலாம் என அந்த மோசடியாளர் கூறியுள்ளார்.

இந்தச் சூழலில் மகன் வாட்டத்துடன் இருப்பதை கவனித்த 81 வயது தந்தை, அது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போதுதான் அவர்கள் சிக்கி இருப்பது டிஜிட்டல் கைது மோசடியாளரிடம் என தெரிய வந்துள்ளது. உடனடியாக இது தொடர்பாக காவல் துறையில் புகார் தெரிவிக்குமாறு தன் மகனிடம் அந்த முதியவர் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT