வாரங்கல்: தெலங்கானா மாநிலத்தில் அரசு பள்ளிக் கூடம் கட்ட 800 ஆண்டு புராதன சிவன் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களிடையே கடும் கண்டனம் எழுந்ததை தொடர்ந்து, இதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இடிக்கப்பட்ட அதே இடத்தில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், கானாப்பூர் மண்டலம் அஷோக் நகரில் 800 ஆண்டு பழமையான புராதன சிவன் கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் அரசுப் பள்ளி கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கி.பி 1231-ம் ஆண்டில், காக்கதீய அரசர்களால் இந்த சிவன் கோயில் கட்டப்பட்டதாக 7 வரிசை கொண்ட தெலுங்கு கல்வெட்டு மூலம் தெரிய வந்துள்ளது. இதனை மத்திய கலாச்சாரம் மற்றும் தொல்லியல்துறையினர் தீவிரமாக கண்டித்துள்ளனர். உடனடியாக கோயில் இடிப்பதை நிறுத்த வேண்டுமென வாரங்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே சிவன் கோயில் இடிக்கப்படுவதை அறிந்து ஊர் மக்கள் ஒன்று கூடி கடுமையாக எதிர்த்தனர்.
இதுகுறித்து வாரங்கல் வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கடந்த 1965-ம் ஆண்டே இந்த இடத்தில் புராதன சிவன் கோயில் இருப்பதை தொல்லியல்துறை அறிந்தது. ஆனால், அதன் பின்னர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து ‘யங் இந்தியா ஒருங்கிணைப்பு ரெஸிடென்ஷியல் பள்ளி’ கட்ட 30 ஏக்கர் நிலம் கையப்படுத்த, இந்த இடத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டன.
அப்போது பாழடைந்த சிவன் கோயில் இருப்பது தெரிய வந்தது. ஆனால் கோயில் இடிக்கப்படவில்லை. இந்த இடம் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது இல்லை. இது வருவாய்த் துறைக்கு சொந்தமானது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இக்கோயிலை இடிக்க முயன்றதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே இடத்தில் மீண்டும் சிவன் கோயில் புதுப்பிக்கப்படும் என வாரங்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.