டெல்லியில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், சர்வதேச விண்வெளி மையம் சென்று திரும்பிய ஷுபான்ஷு சுக்லாவுக்கு ‘அசோக சக்ரா’ விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். அருகில், பிரதமர் மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோர்.படம்: பிடிஐ
புதுடெல்லி: நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 77-வது குடியரசு தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய குடியரசு தின விழாவில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை ஆகும்.
அவர்கள் இருவரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் ராணுவ குதிரை வாகனத்தில்விழா மேடைக்கு வந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் ஷுபான்ஷு சுக்லாவுக்கு, ராணுவத்தில் அளிக்கப்படும் உயரியவிருதான ‘அசோக சக்ரா’ விருதைகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் ராணுவ வாகனங்கள்,கவச வாகனங்கள் ஆகியவை அணிவகுத்து வந்தன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், அர்ஜுன் டேங்க், சூர்யாஸ்த்ரா ராக்கெட்லாஞ்சர் போன்ற ஆயுதங்கள், கண்காணிப்பு கருவிகள் அடங்கிய ராணுவ வாகனங்கள், போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்களுடன் கூடிய வாகனம் ஆகியவையும் அணிவகுத்து வந்தன.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளும் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டதை விளக்கும் வகையிலான ராணுவ வாகன அணிவகுப்பு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல் திட்டங்களை விளக்கும் 13 வாகனங்கள், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்றன. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டை விளக்கும் வாகனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.