சூரத்: மகாராஷ்டிராவின் துலே நகரில் இருந்து மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று குஜராத் மாநிலம் சூரத் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்தப் பேருந்து சூரத் மாவட்டத்தின் பர்டோலி தாலுகா உவா- மானேக்பூர் கிராமத்துக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு மகாராஷ்டிர அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஒரு பேருந்தில் சுமார் 25 பயணிகளும், மற்றொரு பேருந்தில் சுமார் 35 பயணிகளும் இருந்தனர்.
இந்தக் கோர விபத்தில் ஒரு பேருந்து பலமுறை உருண்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. பின்னர் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.