ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருவரை காப்பாற்ற ஏர் ஆம்புலன்ஸில் சென்றபோது விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார் ஷா. இவர் லதேஹர் மாவட்டத்தின் சந்த்வா பகுதியில் நடத்தி வந்த ஓட்டல் மிகவும் பிரபலமானது. கடந்த திங்கட்கிழமை இவரது ஓட்டலில் திடீரென தீப்பற்றியது. இந்நிலையில், தீயில் சஞ்சய் குமார் ஷா படுகாயம் அடைந்தார். உடலில் 65 % தீக்காயங்களுடன் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அவரை உடனடியாக டெல்லியில் உள்ள ஸ்ரீகங்காராம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி, சஞ்சய் குமார் ஷாவை டெல்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தனர். சாலை வழியாக சென்றால் பல மணி நேரமாகும். அதனால் ரெட் பேர்ட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கும் பீச் கிராப்ட் சி 90 என்ற சிறியரக ஆம்புலன்ஸ் விமானத்தை வாடகைக்கு ஏற்பாடு செய்தனர். ஆம்புலன்ஸ் விமானக் கட்டணம், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து வீடு, நிலம் ஆகியவற்றை சஞ்சய் குடும்பத்தார் விற்றுள்ளனர். அப்படியும் பணம் போதவில்லை. வெளியில் ரூ.7 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். பின்னர் திங்கட்கிழமை இரவு 7.11 மணிக்கு ஆம்புலன்ஸ் விமானம் இரவு 7.11 மணிக்கு டெல்லி புறப்பட்டது. ஆனால், 20 நிமிடங்களில் அந்த ஆம்புலன்ஸ் விமானம் தகவல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு இல்லாமல் போனது.
தகவல் அறிந்து மீட்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சத்ரா மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவரை காப்பாற்ற சென்று 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.