திருப்பதி: நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் போரால் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை சரி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் - எம்.ஆர் பல்லி சாலையில் ஒரு குடோனில் வர்த்தக சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிவில் சப்ளை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் அவர்கள் நேற்று மாலை 7 மணியளவில் அந்த குடோனுக்கு ஆய்வு நடத்த சென்றனர். இவர்களை கண்டதும் பிரம்மா ரெட்டி எனும் உரிமையாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அங்கு அதிகாரிகள் சோதனையிட்டு 585 வர்த்தக சிலிண்டர்கள், 80 வீட்டு சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
பாரத் காஸ் உரிமம் இந்த குடோனுக்கு கடந்த 2019-ல் காலாவதி ஆகி விட்டாலும், தொடர்ந்து அங்கு தனியார் சிலிண்டர் வியாபாரம் ரகசியாக நடந்து வந்துள்ளது. இங்கிருந்து திருப்பதிக்கு மட்டுமல்லாமல் திருமலைக்கு ‘கோ காஸ்’ எனும் பெயரில் நிபந்தனைகளை மீறி அனுப்பப்பட்டு வந்துள்ளது.
இந்த குடோனை நடத்தி வந்தவர் முன்னாள் திருப்பதி தேவஸ்தான அறங்காவலரும், திருப்பதி எம்.எல்.ஏவுமான கருணாகர் ரெட்டியின் ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.