புதுடெல்லி: இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் மிசோரம் எல்லைப் பகுதியில் மேத்யூ ஆரோன் வான்டைக் என்ற அமெரிக்கரும், உக்ரைனை சேர்ந்த 6 பேரும் ரகசியமாக முகாமிட்டு உள்ளனர். அங்கிருந்து மியான்மருக்குள் நுழைந்துள்ளனர். அந்த நாட்டின் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தும் ஆயுத பயிற்சியை அளித்து வந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் மிசோரமில் அமெரிக்கர் மேத்யூ ஆரோன் வான்டைக்கும், உக்ரைனை சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மியான்மரின் மியிட்கினாவில் இருந்து மாண்டலே நகருக்கு சென்ற பயணிகள் விமானம் மீது இரு மர்ம ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இந்த ட்ரோன் தாக்குதலில் அமெரிக்கர் மேத்யூ ஆரோனுக்கும் 6 உக்ரைனியர்களுக்கும் தொடர்பு உள்ளது.
இவர்கள் ஐரோப்பாவில் இருந்து சட்டவிரோதமாக மியான்மருக்கு ட்ரோன்களை கடத்தி சென்றுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக செயல்படும் சில தீவிரவாத குழுக்களுக்கு இவர்கள் பயிற்சி அளித்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த மேத்யூ ஆரோன், உக்ரைனை சேர்ந்த விக்டரிடம் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுவை பரிசீலித்த சிறப்பு நீதிபதி பிரசாந்த் சர்மா, மேத்யூ ஆரோன், விக்டரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.