இந்தியா

பெங்களூரு ஏடிஎம் வேன் கொள்ளை: கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் கைது, ரூ.6.29 கோடி பறிமுதல்

இரா.வினோத்

பெங்களூரு: பெங்​களூரு​வில் ஏடிஎம்​களில் பணம் நிரப்​பும் வேனில் ரூ.7.11 கோடி கொள்​ளை​யடிக்​கப்​பட்ட வழக்​கில் தனிப்​படை போலீஸ்​காரர் உட்பட 6 பேரை கைது செய்​தனர். அவர்​களிடம் இருந்து ரூ. 6.29 கோடியை பறி​முதல் செய்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

பெங்​களூரு​வில் கடந்த 19-ம் தேதி ஜேபி நகர் எச்​டிஎஃப்சி வங்​கிக் கிளை​யில் இருந்து ஏடிஎம்​களில் பணம் நிரப்​பும் சிஎம்​எஸ் நிறுவன வேன் ஜெயநகர் நோக்கி சென்று கொண்​டிருந்​தது. அசோகா தூண் அருகே சென்றபோது ரிசர்வ் வங்கி அதி​காரி​களைப் போல சிலர் நடித்​து, 4 பெட்​டிகளில் இருந்த ரூ.7.11 கோடியை கொள்​ளை​யடித்து சென்​றனர். இதுகுறித்து சித்​தாபுரா போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, 8 தனிப்​படைகளை அமைத்து விசா​ரணை நடத்​தினர்.

முதல்​கட்​ட​மாக தனிப்​படை போலீ​ஸார், 30 பேரிடம் விசா​ரித்​தனர். அதில் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில் 3 பேரை நேற்று கைது செய்​தனர்.

இதுகுறித்து பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: “இந்த கொள்ளை வழக்​கில் முதல்​கட்​ட​மாக ஏடிஎம் பணம் நிரப்​பும் வாக​னத்​தின் பாது​காவல​ராக பணி​யாற்​றிய‌ கோவிந்​த​ராஜபுரா போலீஸ் நிலைய கான்​ஸ்​டபிள் அன்​னப்​பா, சிஎம்​எஸ் நிறு​வனத்​தின் பாது​காப்பு அதி​காரி கோபால் பிர​சாத், முன்​னாள் ஊழியர் சேவியர் ஆகிய 3 பேரை கைது செய்​துள்​ளோம். இவர்​களுக்கு உடந்​தை​யாக இருந்த மற்​றவர்​களும் விரை​வில் கைது செய்​யப்​படு​வர். இவர்களிடம் இருந்து ரூ.6.29 கோடி பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. கொள்ளை சம்​பவத்​துக்கு பயன்​படுத்​தப்​பட்ட இன்​னோவா காரை ஆந்​தி​ரா​வில் பறி​முதல் செய்​திருக்​கிறோம். மேலும் ஹைதராபாத்தில் கர்நாடக தனிப்படை போலீஸார் 3 பேரை கைது செய்தனர்.

இந்த கொள்ளை சம்​பவத்தை அன்​னப்​பா, கோபால் பிர​சாத், சேவியர் ஆகிய மூவரும் 3 மாதங்​கள் திட்​ட​மிட்டு செய்​துள்​ளனர். கடந்த 15 நாட்​களாக பணத்தை எப்​படி கொள்​ளை​யடிப்​பது என ஒத்​திகை பார்த்​துள்​ளனர். ஜே.பி.நகரில் இருந்து ஜெயநகர் வரை சிசிடிவி கேமரா இல்​லாத இடங்​களை தேர்வு செய்​து, கச்​சித​மாக கொள்​ளை​யடித்​துள்​ளனர்.

இந்த சதி திட்​டத்​தில் தொடர்​புடைய அனை​வரும் வாட்ஸ் அப் மூலம் ஒரு​வர் மற்​றவரிடம் பேசி​யுள்​ளனர். சம்​பவம் நடந்த தினத்​தன்று 3 பேரின் செல்​போன் எண்​களும் குறிப்​பிட்ட செல்​போன் டவரில் இருந்​துள்​ளன. இவர்​களு​டன் தொடர்​பில் இருந்த மற்ற குற்​ற​வாளி​களின் செல்​போன் எண்​களை கொண்டு அவர்களை பிடிக்​கும் முயற்​சிகள் நடை​பெறுகின்​றன.

இந்த வழக்​கில் 200க்​கும் மேற்​பட்ட தனிப்​படை போலீ​ஸார் கர்​நாடகா மட்​டுமல்​லாமல் ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, தமிழ்​நாடு, கோவா, கேரளா ஆகிய மாநிலங்​களி​லும் தேடு​தல் வேட்டை நடத்​தினர். அவர்​களின் கடுமை​யான வி​சா​ரணை​யின் காரண​மாகவே 54 மணி நேரத்​தில் குற்​ற​வாளி​களை பிடித்​து, பணத்​தை​யும்​ பறி​முதல்​ செய்​ய முடிந்​த‌து” என்​றார்​.

SCROLL FOR NEXT