கேரளத்தில், பிறந்து ஆறு மாதங்களே ஆன பச்சிளங் குழந்தையின் தாய் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அந்தக் குழந்தையை யார் பார்த்துக் கொள்வது எனக் கேள்வி எழுந்தது. இதுபற்றித் தெரிந்ததும் சமூக ஆர்வலர் ஒருவர், அந்தத் தாய் கரோனாவில் இருந்து மீளும்வரை தனது பொறுப்பில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள முன்வந்தார்.
இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திலும் எழுதியிருந்தோம். இப்போது தாய் நலம் பெற்று இல்லம் திரும்பியிருக்கிறார். இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் இத்தனை நாளும் தனது பொறுப்பில் இருந்த அந்தக் குழந்தையைத் தாயிடம் ஒப்படைத்தார். அப்போது குழந்தையைப் பிரிய மனமின்றி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கேரளத்தில் வைரலாகி வருகிறது.
எல்தோஸ் - ஷீனா தம்பதி ஹரியாணாவில் செவிலியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இதில் ஷீனா தனது ஆறுமாதக் குழந்தை எல்வினுடன் டெல்லியிலிருந்து விமானம் மூலம் சொந்த ஊரான கொச்சிக்கு வந்தார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஷீனாவுக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால், குழந்தைக்குத் தொற்று ஏற்படவில்லை. எர்ணாகுளத்தில் ஷீனா தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் குழந்தையை யார் பொறுப்பில் விடுவது என்ற கேள்வி எழுந்தது. அவர்களது உறவினர்களும் உடனே எர்ணாகுளம் வந்து சேர வாய்ப்பு இல்லாத சூழல் இருந்தது. இதுகுறித்துச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதைத் தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை செய்து வரும், சமூகச் செயல்பாட்டாளரும், பேரிடர் நிவாரண அமைப்பின் உறுப்பினருமாகிய முனைவர் மேரி அனிதா அந்தக் குழந்தையைக் கவனித்துக்கொள்ள முன்வந்தார். இதற்கு அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முழு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்துத் தனது குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களின் இருப்பை உறுதி செய்துவிட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்த குழந்தையைப் பராமரிக்க வந்துவிட்டார் மேரி அனிதா.
கடந்த ஒரு மாத காலமாக அந்தக் குழந்தை மேரி அனிதாவின் அரவணைப்பில் இருந்தது. இப்போது குழந்தையின் தாய் கரோனா தொற்றில் இருந்து மீண்டிருக்கும் நிலையில் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார் மேரி அனிதா. அப்போது, ஒரு மாத காலமாகத் தன்னுடனே இருந்த அந்தக் குழந்தையைப் பிரிய இருப்பதை நினைத்துக் கண்ணீர் விட்டு அழுதார் மேரி அனிதா.
அவர் அழுதபோது எடுக்கப்பட்ட படம் தாய்மை, பிரிவு, மனிதம் என அத்தனை உணர்வுகளையும் உணர்த்துவதாகச் சொல்லி கேரள மக்கள் அதை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். உளவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் மேரி அனிதா, கரோனாவின் தொடக்கம் முதலே சாலையோரவாசிகளுக்குத் தன் வீட்டில் இருந்தே உணவு தயாரித்து விநியோகித்து வந்தார்.
இதுகுறித்து மேரி அனிதா ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “குழந்தைகள் கடவுளின் வரம். அதனால்தான் இதைக் கடவுளே கொடுக்கும் வரமாக நினைத்து, சேவை மனதோடு குழந்தையைக் கவனித்துக் கொண்டேன். ஒருமாதம் குழந்தையுடனேயே இருந்துவிட்டதால் இந்தப் பிரிவு வலிக்கிறது. என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன்.
என் கணவர் வழக்கறிஞராக இருக்கிறார். நான் இந்தக் குழந்தையைக் கவனித்துக்கொள்ளச் செல்கிறேன் எனச் சொன்னதும் பெருந்தன்மையோடு அவரும் சம்மதித்தார். எங்கள் மூன்று குழந்தைகளையும் எனது இடத்தில் இருந்து நன்றாக கவனித்துக் கொள்ளவும் செய்தார். எல்வினையும் சேர்த்து இப்போது எனக்கு நான்கு குழந்தைகள்’’ என்றபோது அலைபேசியிலேயே அவரது குரல் உடைகிறது.