ஷாகின்பாக் ஜாலியன்வாலா பாக் போன்று மாறக்கூடும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றி பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஷாகின்பார்க் போராட்டம் பற்றி ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘2024ம் ஆண்டு வரை என்ஆர்சி செயல்படுத்தப்படாது என்று அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். அவர்கள் ஏன் என்பிஆர்-க்கு 3900 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள்?
பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி தேர்தலுக்கு பிறகு ஷாகின்பாக் காலி செய்யப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படலாம். ஷாகின்பாக் இடமானது ஜாலியன்வாலா பாக் போன்று மாறலாம். துப்பாக்கியால் சுட வேண்டும் என பாஜக அமைச்சர்களே கூறுகின்றனர். இதுபற்றி மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
தவறவிடாதீர்