அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு தலித் உறுப்பினர் உள்ளிட்ட 15 அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அயோத்தி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பிரதமர் மோடி பதில் அளிக்கையில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயாராக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளபடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு 3 மாதங்களில் அறக்கட்டளை அமைக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி ஸ்ரீ ராமஜென்மபூமி திரத் ஷேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன்" என்றார்.
அதன்பின் அறக்கட்டளை நிர்வாகிகள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்கையில், "அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட உள்ள ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா அறக்கட்டளையில் 15 அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த 15 பேரில் ஒரு உறுப்பினர் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தில் இருந்து நியமிக்கப்படுவார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை உருவாக்கும் முடிவை எடுத்த பிரதமர் மோடிக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையிடம் 67 ஏக்கர் நிலமும் ஒப்படைக்கப்படும். ராமர் கோயில் தொடர்பான ஒவ்வொரு முடிவையும் இந்த அறக்கட்டளை சுயமாக ஆலோசித்து எடுக்கும்.
நூற்றாண்டுகளாகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள் ராமர் பிறந்த இடத்தில் எழுப்பப்படும் கோயிலைக் காணவும், மரியாதை செலுத்தி தரிசனம் செய்யவும் காத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை நிறைவேறும் என நம்புகிறேன்’’ என்று அமித் ஷா தெரிவித்தார்.
தவறவிடாதீர்கள்.........