இந்தியா

காற்று மாசு அதிகரித்துள்ளதால் டெல்லியில் 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், தங்கள் துறை சார்ந்த 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என டெல்லி அரசின் 2 அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

டெல்லியில் காற்று மாசு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் காற்றின் தரக் குறியீடு 403 ஆக உயர்ந்து ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவை எட்டியது. இதையடுத்து, வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் ஆகியோர், தங்கள் துறையில் பணியாற்றும் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். எனினும், இந்த உத்தரவு மருத்துவமனைப் பணியாளர்களுக்கு பொருந்தாது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறும்போது, “தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். சுகாதாரத் துறைக்கு இது பொருந்தாது. மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும் அத்தியாவசியப் பணியாளர்களாகக் கருதப்படுகின்றனர்” என்றார்.

அதேபோல், அவசரகால மீட்புப் பணிகள், தீயணைப்புத் துறை, மின்சாரம், குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், “டெல்லி மற்றும் அதை ஒட்டியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தின் 5 மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், நவம்பர் 5-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அதிகபட்சமாக 50% ஊழியர்களுடன் மட்டுமே அலுவலகத்தில் செயல்பட வேண்டும். மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று காலையிலும் டெல்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவிலேயே நீடித்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT