பாட்னா: பிஹாரில் வெள்ளத்தால் சுமார் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என மாநில அரசை தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தி உள்ளார்.
பிஹார் மாநிலம் மிகவும் மோசமான வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக கங்கை உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தலைநகர் பாட்னா உட்பட 15 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
வெள்ளத்தால் சுமார் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தேசிய செயல் தலைவரும், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், பாட்னாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இருந்த போதிலும், உணர்வற்ற அரசாங்கம் அவர்களின் துயரத்தின் மீது அக்கறையின்றி இருக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கை உடனடியாக தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாநில அரசு தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிஹாரில் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் மத்திய அரசு சார்பில் ரூ.7,000 வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.