லக்னோ: ஆண் குழந்தையை ரூ.1.5 லட்சத்துக்கு விற்றுவிட்டு கடத்தப்பட்டதாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் நாடகமாடியுள்ளார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது ஆண் குழந்தையை காணவில்லை என கஸ்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறிப்பாக, கஸ்கஞ்ச் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்றபோது தனது குழந்தையை மர்ம நபர்கள் கடத்தியதாக தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் கூலித் தொழிலாளியாக பரீதாபாத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது குழந்தையை ரூ.1.5 லட்சத்துக்கு தரகர்கள் மூலம் அந்தப் பெண் விற்பனை செய்ததும், அதை மறைக்க கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தை விற்பனை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் சலேம்பூரைச் சேர்ந்த தரகர் அருண், அவரது மனைவி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.