தெஹ்ரி: உத்தராகண்ட் மாநிலம் தெஹேரி மாவட்டத்தில் நரேந்திர நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குஞ்சபுரி - ஹிந்தோலாகல் அருகே பேருந்து 70 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில் ஐந்து பயணிகள் உயிரிழந்தனர்.
குஞ்சபுரி - ஹிந்தோலாகல் அருகே 18 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, திடீரென சாலையை விட்டு விலகி 70 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
தகவல் கிடைத்ததும், மாநில பேரிடர் மீட்புப் படை கமாண்டன்ட் ஸ்ரீ அர்பன் யதுவன்ஷியின் வழிகாட்டுதலின் பேரில், போஸ்ட் தல்வாலா, போஸ்ட் கோடி காலனி மற்றும் எஸ்டிஆர்எஃப் பட்டாலியன் தலைமையகத்தைச் சேர்ந்த மொத்தம் ஐந்து எஸ்டிஆர்எஃப் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
‘விபத்துக்குள்ளான பேருந்தில் மொத்தம் 18 பேர் இருந்ததனர், அதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த மூன்று பேர் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மேலும் 10 பேர் சிகிச்சைக்காக நரேந்திர நகர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தெஹ்ரியின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஐந்து பேர் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தெஹ்ரியின் நரேந்திர நகரில் உள்ள குஞ்சபுரி கோயில் அருகே பேருந்து விபத்து பற்றிய செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமை கிடைக்க நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
விபத்தில் காயமடைந்தவர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றன. மேலும் பலத்த காயமடைந்தவர்கள் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்தார்.