பிரதிநிதித்துவப் படம்
பல்நாடு: ஆந்திராவில் வீட்டின் பூட்டை உடைத்து 46 சவரன் தங்க நகைகள், 2.4 கிலோ வெள்ளி பொருட்களை திருடர்கள் திருடி சென்றனர். ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், எட்லபாடு எனும் ஊரில் வசிப்பவர் பார்வதி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது குடும்பத்தாருடன் ஹைதராபாத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், நேற்று காலை அனைவரும் சொந்த ஊர் திரும்பினர்.
அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து யாரோ வீட்டில் இருந்த 46 சவரன் நகைகள், 2.4 கிலோ வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுகுறித்து போலீஸாருக்கு புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் ஒரு கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.