புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மக்களவையின் சுமார் 400 தொகுதிகள் அமைய இருக்கின்றன. இந்த ஆறு மாநிலங்களில் வென்றால் மத்தியில் அரசு அமைக்கலாம்.
மத்திய அரசு அடுத்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நாட்டில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; அதேபோல் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் உயரும்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்தியாவில் மக்களவைக்கான 543 தொகுதிகள் 816 எண்ணிக்கையாக உயருகிறது. மாநிலங்களின் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் 50 சதவீதம் அதிகரிக்கும்.
மிக முக்கியமாக, வெறும் ஆறு மாநிலங்களிலேயே மக்களவையின் சுமார் 400 தொகுதிகள் அடங்கியுள்ளன. உ.பி-யில் அதிகபட்சமான 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவை, தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால் 120 ஆக உயரும்.
இது மகாராஷ்டிராவில் 48 லிருந்து 72-ஆக அதிகரிக்கும். உ.பி மற்றும் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, மேற்கு வங்க மாநிலம் மூன்றாவது இடத்தில் இருக்கும். அங்கு தற்போது 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
அவை 63 ஆக உயரும். நான்காவது இடத்திற்கு வரும் பிஹாரின் 40 மக்களவைத் தொகுதிகள் 60 ஆக உயரும். தமிழ்நாடு ஐந்தாவது இடத்திற்கு வந்து 39-லிருந்து 59 ஆக உயரும். மத்தியப் பிரதேசம் ஆறாவது இடத்திற்கு 29 மக்களவைத் தொகுதிகளிலிருந்து 44 ஆக உயரும். இந்தச் சூழலில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார், தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 400-ஐ தாண்டுகிறது.
மறுசீரமைப்பிற்கு பிறகு மக்களவையில் பெரும்பான்மை பெறுவதற்குத் தேவையான இடங்களின் எண்ணிக்கை 408-ஆக இருக்கும். எனவே, இந்த ஆறு மாநிலங்களில் சிறப்பான முடிவுகளைப் பெறும் கட்சியால் எளிதாக ஆட்சியைப் பிடிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்க்கின்றன. இருப்பினும், மத்திய அரசின் தற்போதைய முயற்சியைப் பார்க்கும் போது, இம்முறை இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
மசோதாவை நிறைவேற்ற, கடந்த சில மாதங்களாக மத்திய அரசு பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகள் ஒவ்வொன்றாகக் கையாளப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் பணிகளும மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது, திமுக, சரத் பவாரின் என்சிபி போன்ற எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.