சண்டிகர்: 220 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் தனவுரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் நிர்பய் (4). நேற்று அதிகாலை சிறுவன் நிர்பய், தனது தந்தை மஞ்சித்துடன் வயலுக்குச் சென்றார். அப்போது மஞ்சித் சாப்பிடுவற்காக மகனை அங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றார். அப்போது அங்கு தோண்டப்பட்டிருந்த 220 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த நிர்பய் தவறி குழிக்குள் விழுந்துவிட்டான்.
இதைப் பார்த்த நிர்பயின் தாத்தா கர்னாயில் சிங், சம்பவ இடத்துக்கு ஓடி வந்து கிராம மக்களை உதவிக்கு அழைத்தார். இதையடுத்து போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து ஆய்வு செய்த பின்னர் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கும் (என்டிஆர்எஃப்), மாநில பேரிடர் மீட்புப் படையினருக்கும் (எஸ்டிஆர்எஃப்) தகவல் தெரிவித்தனர்.
என்டிஆர்எஃப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் என்டிஆர்எஃப் குழுவுக்கு உதவும் பணிக்காக வந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் தோமர், மீட்புப் பணி நடைபெறும் இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பள்ளம் வெட்டி சிறுவனை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இரவு வரை மீட்புப் பணிகள் நடைபெற்றன.