காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் போலி மதுபானம் குடித்த 4 பேர் உயிரிழந்தனர். உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள வார்தெஜ் நகரில் விற்கப்பட்ட போலி மதுபானத்தை வாங்கிக் குடித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் கவலைக்கிட மான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “வார்தெஜ் நகரைச் சேர்ந்த ஒருவரும், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து போலி மதுபானத்தை விற்பனை செய்துள்ளனர். போலி மதுபானம் விற்பனை செய்த 2 பேரையும் தீவிரமாக தேடி வருகிறோம்” என்றனர். குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.