புதுடெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய சர்வதேச ஆயுத கடத்தல் கும்பல், வெளிநாட்டு ஆயுதங்களை பஞ்சாப் எல்லைப் பகுதிக்கு ட்ரோன்கள் மூலம் அனுப்புகிறது. இவை நாடு முழுவதும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தாதா கும்பல்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கிடைத்த உளவுத் தகவலையடுத்து, டெல்லி ரோஹினி பகுதியில் டெல்லி போலீஸார் காத்திருந்தனர். அவ்வழியாக வந்த ஒரு வெள்ளை நிற காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் இருந்த 8 வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், 84 தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீஸார் காரில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த துப்பாக்கிகள் சீனா மற்றும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என விசாரணையில் தெரியவந்துள்ளது.