புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்போன் செயலிகள் முடக்கப்பட்டதாகவும் இதனால் பொதுமக்களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் சட்டவிரோத செயலிகளை கண்டறிந்து தடை செய்ய மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு மத்திய தொகுதி பாஜக உறுப்பினர் பிசி மோகன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த ஜூன் வரை், மோசடியான கடன் செயலிகள் உட்பட மொத்தம் 3,718 செல்போன் செயலிகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் படி முடக்கப்பட்டுள்ளன.
காவல் துறை வேண்டுகோளின்படி், 15.75 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளும், 5.77 லட்சம் ஐஎம்இஐ எண்களும் முடக்கப்பட்டுள்ளன. சைபர் மோசடி செய்பவர்களால் பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க, I4சி அமைப்பால் இயக்கப்பட்டு, நிதி மோசடிகளை உடனடியாகப் புகாரளிப்பதற்காக 2021-ல் தொடங்கப்பட்ட சைபர் நிதி மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு (சிஎப்சிஎப்ஆர்எம்எஸ்) CFCFRMS உதவியாக இருந்தது. இதுவரை 32.80 லட்சத்துக்கும் அதிகமான புகார்களின் மூலம், பொதுமக்களின் ரூ.11,158 கோடிக்கும் அதிகமான தொகை சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.