ஹைதராபாத்: வரும் மார்ச் மாத இறுதிக்குள் நக்சலைட்கள் அனைவரும் ஆயுதங்களை கைவிட்டு, போலீஸில் சரண் அடைய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி முதல் ‘ஆபரேஷன் ககார்’ அல்லது ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் எனும் பெயர்களில் நக்சலிஸத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய பாதுகாப்பு படைகளும், மாநிலங்களின் ஆயுதப்படையும் இணைந்து வனப்பகுதிகளில் பதுங்கி உள்ள நக்சலைட்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறன.
இதனால் நக்சலைட்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெறும் துப்பாக்கி சண்டையில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஆந்திராவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் வனப்பகுதிகளில் பதுங்கி இருந்த 37 நக்சலைட்கள் நேற்று ஹைதராபாத்தில் தெலங்கானா மாநில டிஜிபி சிவதர் ரெட்டி முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தனர். இவர்களில் 34 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 23 பேர் பெண்கள். இவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதோடு, உடனடி உதவியின் கீழ் தலா ரூ.25,000 நிதி உதவியும் வழங்கப்படுகிறது.