போபால்: மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டம், நார்வார் நகரின் விந்திய மலையில் பழங்கால கோட்டை உள்ளது. கடந்த 10-ம் நூற்றாண்டில் கச்வஹா ராஜபுத்திர மன்னர்கள் இந்த கோட்டையைக் கட்டினர். 15-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர்கள் கோட்டையைக் கைப்பற்றினர். 19-ம் நூற்றாண்டில் மராத்தா சிந்தியா மன்னர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கோட்டை வந்தது. தற்போது இந்திய தொல்லியல் துறை நார்வார் கோட்டையைப் பராமரித்து வருகிறது.
இதில் கடந்த 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 14 பீரங்கிகள் உள்ளன. பித்தளை, செம்பு, வெண்கலம் உள்ளிட்ட உலோகங்களால் தயாரிக்கப்பட்ட இந்த பீரங்கிகள் மிகவும் அரியதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பீரங்கியும் 5 அடி 10 அங்குலம் நீளம், 30 அங்குலம் அகலம் கொண்டவை. இந்த பீரங்கிகளில் பெர்சிய, தேவநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. சர்வதேச பழங்காலப் பொருட்கள் சந்தையில் நார்வாரி கோட்டை பீரங்கிகளின் மதிப்பு தலா ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.
கடந்த 15-ம் தேதி நள்ளிரவில் சுமார் 25 முதல் 30 திருடர்கள் நார்வார் கோட்டைக்குள் ரகசியமாக புகுந்துள்ளனர். கோட்டையின் திறந்தவெளி வளாகத்தில் செங்கல் தூணில் வைக்கப்பட்டிருந்த 3,000 கிலோ எடை கொண்ட ஒரு பீரங்கியைத் திருடர்கள் லாவகமாக பெயர்த்து எடுத்து உள்ளனர். நார்வார் கோட்டை சுமார் 500 அடி உயரத்தில் உள்ளது. அங்கிருந்து ஒரு இரும்பு டிராலியில் பீரங்கியைக் கீழே கொண்டு வந்துள்ளனர். கோட்டையின் அடிவாரத்தில் ஒரு லாரி மற்றும் சிறிய ரக கிரேன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. கிரேன் உதவியுடன் லாரியில் பீரங்கி ஏற்றப்பட்டு கடத்திச் செல்லப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 15-ம் தேதி நார்வார் கோட்டையில் 6 பாதுகாவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 2 இரவு நேர காவலர்கள் கோட்டையில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளாமல் வீட்டுக்குச் சென்று உள்ளனர். இதைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கோட்டையில் இருந்து ஒரு பீரங்கியை எளிதாக கடத்திச் சென்று உள்ளனர். சர்வதேச கும்பலைச் சேர்ந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடத்தப்பட்ட பீரங்கியை மீட்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நார்வார் காவல் துறை அதிகாரி வினய் யாதவ் கூறும்போது, “பாதுகாவலர்களின் கவனக் குறைவால் திருட்டு நடைபெற்று உள்ளது. பீரங்கியைத் திருடிய மர்ம நபர்களைத் தீவிரமாக தேடி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
நார்வார் பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 2007-ல் நார்வார் கோட்டையில் இருந்து சிறிய ரகத்தைச் சேர்ந்த 2 பீரங்கிகள் திருடப்பட்டன. இதுதொடர்பாக சிவபுரி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், “நார்வார் கோட்டை எங்கள் குடும்ப சொத்து. நான் திருடவில்லை. எனக்கு சொந்தமான பீரங்கியை எடுத்துச் சென்றேன்” என்றார்.
கடந்த 2007-ல் திருடப்பட்ட சிறிய ரக பீரங்கிகள் இதுவரை கிடைக்கவில்லை. கடந்த 2006-ல் மத்திய பிரதேசத்தின் கட்னி பகுதியில் இருந்து 2,200 ஆண்டு பழமையான சுவாமி சிலை திருடப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகர கிடங்கில் மீட்கப்பட்டது. தற்போதும் சர்வதேச கும்பலைச் சேர்ந்தவர்கள் கோட்டையில் இருந்து பீரங்கியைத் திருடி சென்றிருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.